98 வயதில் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாதான் காரணம்: யோகா பாட்டி நானம்மாள் பேட்டி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, 26 January 2018

98 வயதில் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாதான் காரணம்: யோகா பாட்டி நானம்மாள் பேட்டி

98 வயதில் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாதான் காரணம் என்று பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்ற யோகா பாட்டி நானம்மாள் கூறினார்.
98 வயதில் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாதான் காரணம்: யோகா பாட்டி நானம்மாள் பேட்டி
கோவை:
கோவை கணபதி பாரதி நகரில் குடியிருந்து வரும் யோகா பாட்டி நானம்மாளுக்கு (வயது 98) யோகாவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 
தனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது:-
யோகாவில் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நமது நாட்டுக்கும், தமிழகத்துக்கும், கோவைக்கும் பெருமை. மார்ச் மாதம் முதல்வாரத்தில் இந்த விருதை பெற டெல்லி அழைத்துள்ளனர். நான் எனது பெற்றோரிடம் இருந்து யோகாசனம் செய்ய கற்றுக்கொண்டேன். யோகாவில் 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து வருகிறேன்.
எனக்கு 6 பிள்ளைகள், 12 பேரன்-பேத்திகள், 11 கொள்ளு பேரன்-பேத்திகள் உள்ளனர். அவர்களும் யோகா கற்றுக்கொண்டு யோகாசனம் செய்து வருவதால் யாருக்குமே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்பட எந்த நோய்களும் இல்லை.
எங்கள் வீட்டில் உள்ள எந்த பெண்களுக்கும் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை செய்தது கிடையாது. சுகப்பிரசவம்தான் நடந்துள்ளது. தற்போது எனக்கு 98 வயது ஆனாலும் கண்பார்வை, நினைவாற்றல் காது கேட்கும் திறன் குறையவில்லை. கண்ணாடி போடாமலேயே தெளிவாக பார்க்க முடிகிறது.
நான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தினமும் யோகாசனம் செய்து வருவதால்தான். எனது வீட்டிற்கு தினமும் பலர் வந்து செல்கிறார்கள். நான் அவர்களுக்கு யோகாவுடன் இயற்கை மருத்துவம், பாட்டி வைத்தியம் ஆகியவற்றையும் சேர்த்து கற்றுக்கொடுக்கிறேன். யோகா செய்தால் உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம்.
எனவே அனைவரும் தினமும் யோகா செய்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். தினமும் யோகா செய்து வரும்போது நம்மை அறியாமலேயே நமக்கு நாட்டுப்பற்று வந்துவிடும். கோபம், எரிச்சல் மறைந்துவிடும். யோகா பல நாடுகளில் பரவி இருப்பதற்கு நமது பிரதமர் மோடிதான் காரணம். எனவே அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages