அநீதியை விட்டும் விலகிக்கொள்ளுங்கள்! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 3 January 2018

அநீதியை விட்டும் விலகிக்கொள்ளுங்கள்!

Image result for நீதி
புகாரி நபிமொழித் தொகுப்பிலிருந்து சில..

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.


(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்" என்று கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?" என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், "அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)" என்று கூறினார்கள் என்பதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள்.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்). (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் யாரென்றால், மனிதர்களிலேயே கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான்.


உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார்கள்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, "நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும் அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்" என்று கூறினார்கள்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages