பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் - வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா? - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, 1 February 2018

பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் - வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா?

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இது, தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இது, தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும். இதில், வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதை தாக்கல் செய்கிறார்.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுதான் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். எனவே, தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும்.


மேலும், சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து, பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை மாற்றி, பிப்ரவரி முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கம், கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. அத்துடன், ரெயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்படுகிறது.

ஜி.எஸ்.டி. அமலுக்கு முந்தைய மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி ஆகியவை மூலம் கிடைத்த வருவாய் பற்றி தனிக்கணக்கும், ஜி.எஸ்.டி. அமலுக்கு பிந்தைய மாதங்களில், ஜி.எஸ்.டி., சுங்க வரி ஆகியவை மூலம் கிடைத்த வருவாய்க்கென தனிக்கணக்கும் அருண் ஜெட்லி தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அம்சங்கள் இருக்காது என்றும், கடினமானதாகவே இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே சூசகமாக கூறியுள்ளார். இருப்பினும், வருமான வரி செலுத்தும் சாமானியர்களுக்காக, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

8 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலும் வர இருப்பதால், பட்ஜெட்டில் புதிய ஊரக திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நூறு நாள் வேலை திட்டம், கிராமப்புற வீட்டு வசதி திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், பயிர் காப்பீடு ஆகிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் ஓட்டு வங்கி குறைந்ததால், விவசாய துறைக்கு சலுகை அறிவிக்கப்பட உள்ளது. ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்களுக்கு சலுகை கிடைக்கும்.

நெடுஞ்சாலை, ரெயில்வே நவீனமயமாக்கல் போன்ற கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உயர்த்தப்படும். கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. நிதி பற்றாக்குறை, 3.2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

சில துறைகளில் ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்கச்சலுகைகள் அறிவிக்கப்படக் கூடும். சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்படும்.

உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் வகையிலும், வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும் அருண் ஜெட்லியின் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages